Monday, March 1, 2010

கசாப் விடுதலை - இந்திய சட்டத்தின் இயலாமை


ஊடகங்களில் விரைவில் முக்கிய செய்தியாக வெளிவரவிருக்கும் செய்திதான் இது. இந்தியாவை மட்டுமல்லாது, உலகநாடுகளையும் உலுக்கிய மும்பை 26/11 தாக்குதல் சம்பவத்தில் உயிருடன் பிடிபட்ட ஒரே கொலைக்குற்றவாளி கசாப் நிச்சயமாக தண்டனை பெறப்போவதில்லை. அவனை வைத்து அவ்வப்போது அரசியல் செய்ய, வழக்குவிசாரணை என்ற பெயரில் எவ்வளவு காலம் தள்ள முடியுமோ அவ்வளவு காலம் தள்ள அனைத்து வழிகளையும், யுக்திகளையும் கையாள்வர். அப்படியே ஒருவேளை நீதிமன்றம், கசாப்புக்கு தூக்கு தண்டனை வழங்கினாலும் உச்சநீதிமன்றத்தில் மறுமுறையீடு, ஜனாதிபதியிடம் கருணைமனு என்று காலம்கடத்துவதற்கான அனைத்து வழிகளும் இருக்கவே இருக்கிறது. எத்தனை கோடி மக்கள் துன்பப்பட்டாலும் அவர்களின் துன்பத்தினைக்கூட தம் அரசியல் லாபத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் கீழ்த்தரமான மற்றும் கொடூரமான மனநிலையில்தான் விதிவிலக்கின்றி இந்திய அரசியல்வாதிகள் யாவரும் உளர். கொலை செய்தது அப்பட்டமாக தெரிந்தபிறகும் வழக்கு விசாரணையில் எவ்வித முன்னேற்பாடும் ஏற்படாதது ஏன்?

கசாப் அடுக்கடுக்கான பொய்மூட்டைகளை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறான் நீதிமன்றத்தில். முதலில் தனக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்று கூறிவந்தவன், பின்னாட்களில் சிறையில் உருது நாளேடு வழங்க உத்தரவிட வேண்டுமென கோருகிறான். தான் இன்னமும் ‘Minor’ என்பதால் Minor’ சட்டவிதிகளின்படியே விசாரிக்க வேண்டுமென தன் வழக்கறிஞர் மூலம் வலியுறுத்துகிறான். அந்த வழக்கறிஞரும், உலகத்தின் ஒட்டுமொத்த சட்டப்பாதுகாவலன் தான் மட்டுமே என்பதுபோல “காவல்துறை ஆரம்பத்திலிருந்தே கசாப்பை ‘Major’ என்று வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் உண்மையில் அவன் இன்னமும் ‘Minor’ தான்” என்கிறார், கொஞ்சம் கூட நா கூசாமல். தொழில்தர்மத்தினை காட்ட இதுதானே சிறந்த சந்தர்ப்பம்!
 வெகுதிறமையாக நவீனத் துப்பாக்கிகளை இயக்குவதோடு, வெகுசாதுரியமாகவும், தைரியமாகவும் கண்ணில் கண்டவர்களையும் சரமாரியாக, பகிரங்கமாக சுட்டுக்கொன்ற ஒருவனை, தன் சகமனிதர்களை சுட்டுக்கொன்ற ஒருவனை, அந்த கொடியவனை காப்பாற்ற சட்டத்திலுள்ள ஓட்டைகளை எப்படியெல்லாம் தமக்கு சாதகமாக திருப்பிக்கொள்கின்றனர் என்பதற்கு இதைவிடவும் வேறொரு வழக்கு இவ்வுலகத்தில் இருக்கமுடியுமா என்ன? மருத்துவப்பரிசோதனைக்குப்பிறகு, கசாப் ‘major’ என்பது உறுதிசெய்யப்பட்டுவிட்டதால் தற்போது major-minor பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. கசாப் ஒரு பொய்மூட்டை என்றால் அவனது வழக்கறிஞர் ஒரு பொய்கிடங்கு என்றால் மிகையாகாது. படிக்க நாளேடு வேண்டும், வாசனைத்திரவியங்கள் வேண்டும் என்று நாளுக்குநாள் தன் கோரிக்கைகளை அடுக்கிக்கொண்டே போகும் கசாப், இன்னும் சில நாட்களில் சத்யம் மோசடி மன்னர்-இராமலிங்க ராஜுக்கு வழங்கப்பட்டதைப்போன்ற சலுகைகள் தனக்கும் அளிக்கப்பட வேண்டுமென கேட்டாலும், இந்த அரசு செய்துகொடுக்கத் தயங்காது என்பதில் மாற்றுக்கருத்துண்டா?


காலம்கடத்துவதற்கு நீதிமன்றங்களிலும் நாங்கள் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிருபிப்பதற்கு ஆளும் காங்கிரசு அரசு எப்போதும் எள்ளவும் தயங்கியதில்லை. மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களும் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டதுடன் கசாப் மரபணு மாதிரிகளையும் வழங்கியுள்ளதாக தெரிவித்தது. இன்னமும் தெரிவிக்கிறது. இனிமேலும் தெரிவிக்கும். வழங்கப்பட்ட 2 மரபணு மாதிரிகளிலும் பெரும் கவனக்குறைவாக இருந்ததை பாஜக தலைவர் அருண்ஜெட்லி கடுமையாக சாடியுள்ளார். வழங்கப்பட்ட 2 மரபணு மாதிரிகளும் வேறொருவருடையது, தவறுதலாக கசாப்பினுடையதாக அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக சமாதானம் சொல்லும் சோனியா அரசை மீண்டும் ஆட்சிலமர்த்தியிருக்கும் இந்த மக்களின் செயலை என்னவென்று சொல்லுவது? பலிபீடத்தில் தலையைத் தானே முன்வந்து வைப்பதுதான் இது….. ஆடு கசாப்புக்கடைக்காரனைத்தானே நம்பும்?!


“இந்தியா பாதுகாப்பற்ற நாடு; முடிந்தவரையில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வதை தவிருங்கள்” என்று பகீரங்கமாக தன்னாட்டு மக்களுக்கு அமெரிகா எச்சரிக்கை விடுத்துள்ளது எதைக்காட்டுகிறது? இந்தியர்களைப் பொறுத்தவரை ஒரு பிரச்சனை அவர்களின் வீட்டில் ஏற்படாதவரை அது அவர்களுடைய பிரச்சனையாகாது. இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, அஹமதாபாத், மும்பை, ஹைதராபாத், ஜெய்பூர், பெங்களூர் மற்றும் கவுகாத்தி என அனைத்து நகரங்களிலும் தொடர்சங்கிலியாக குண்டுகள் வெடித்து நூற்றுக்கணக்கான மக்கள் மடிந்தாலும் அதைப்பற்றியதான விசாரனையின் நிலையை அறிந்துகொள்ள பெரும்பான்மையானவர்கள் முயற்சிப்பதில்லை. காரணம், அவர்களின் வீட்டிலிருந்து யாரும் இறக்கவில்லை. இந்திய ஒருமைப்பாடு என்பதெல்லாம் மறைந்து 62 ஆண்டுகள் ஆகின்றது.


இந்திய பாராளுமன்றத்தின் மீது தாக்குதலை நடத்திய தூக்குத்தண்டனை குற்றவாளி “அப்சல்குரு” இன்னமும் சிறையில் சொகுசாக வலம்வந்து கொண்டிருக்கும் நிலை வேறெந்த நாட்டிலும் கனவிலும் நடைபெறுமா? ஓட்டுவங்கியை குறிவைத்தே நடக்கும் இந்திய அரசியலில் எந்தக்குற்றவாளியும் எந்நிலையிலும் எந்த காலகட்டத்திலும் தண்டிக்கப்பட போவதில்லை. இங்கே தண்டிக்கப்படுவதெல்லாம் அதன் ஏழை, பாட்டாளி, உழைக்கும் மற்றும் நடுத்தரவர்க்கங்கள் மட்டும்தான்.
 
உபயம் -  மின் அஞ்சல் செய்தி  

1 comment:

  1. மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய டேவிட் ஹெட்லி பற்றிய தகவல்கள் கூட நமக்கு மறுக்கப்பட்டுவிட்டன என்பதும் ஒரு கசப்பான உண்மை. அமெரிக்க குடிமகனான ஹேட்லி பாகிஸ்தானிய தீவிரவாத அமைப்புகளோடு சேர்ந்து நடத்திய குண்டுவெடிப்பில் பிடிக்கப்பட்டு அமெரிக்க சிறையில் இருக்கிறான். அந்த விசாரணை அறிக்கையை இந்தியாவிற்கு கொடுக்க மறுக்கிறது அமெரிக்க அரசாங்கம். காரணம், ஹேட்லி உண்மைகளை ஒப்புக்கொள்ளும் முன் போட்ட இரண்டு நிபந்தனைகள்.. ஒன்று.. தன்னை இந்தியாவிற்கு நாடு கடத்தக்கூடாது, மற்றொன்று.. இந்தியாவிற்கு தன்னை குற்றவாளியாக நிலை நிறுத்தும் எந்த ஒரு ஆதாரமோ இல்லை அறிக்கைகளோ தரப்படக்கூடாது...
    அமெரிக்க அரசாங்கம் பாகிஸ்தானிய தீவிரவாதிகளை ஒடுக்க இது உதவும் என நினைத்ததோ தெரியவில்லை.. ஆனால் இதனால் பாதிக்கப்பட்ட நாட்டுக்கு நீதி மறுக்கப்பட்டு இருக்கிறது.. அந்த தீவிரவாத அமைப்பும் இப்போது கள்ளச் சிரிப்பு சிரித்துக்கொண்டிருக்கிறது... அமேரிக்கா தான் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்த இந்த இரு நாடுகளுக்குமிடையில் சமாதனம் என்றும் வந்திடக்கூடாது என்பதிலேயே கவனமாக இருப்பது இதிலிருந்து தெளிவாகிறது...
    இந்தியாவோ இவை அனைத்தையும் பார்த்து அமைதியாய் நின்றுகொண்டிருக்கிறது.. அரசியல் சாணக்கியத்தனம் எல்லாம் பணத்திற்கு அடிமையாகி மழுங்கிப்போய் விட்டது...
    இருபது வருடங்களுக்கு முன் நடந்த ராஜீவ் கொலையில் சம்பந்தமுடைய நளினியை பத்தொன்பது வருடங்களாகியும், ஆயுள் தண்டனை முடிந்தும் வெளியே விட மறுக்கும் இதே அரசு, பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றவர்களை கண்டுகொள்வதே இல்லை.. இன்னும் பல மாநிலங்களில்... நம் நாட்டை சேர்ந்த கொலைகாரர்களே அரசியலில் முக்கியப் புள்ளிகளாக நடமாடும் அவலம் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
    இவர்கள் செய்யும் அரசியலில் அப்பாவி மக்கள் தான் பலியாகிக்கொண்டிருக்கிறார்கள்..

    ReplyDelete